சுடர்

செஞ்சுடரின் சிந்தனைகள்

Sunday, December 26, 2004

உடை கழற்றும் ஆண் வக்கிரம்.

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை
நேசக்தகுமாரர் அக்கறையோடு வெளிபடுத்தி உள்ளார்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர் எழுதிய கட்டுரையை அவரே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை
என்பது புலப்படும்.

முஸ்லிம் பெண்கள் அணியும் மேலதிகமான உடைக்கும் அவர் எடுத்துக் காட்டிய தகவல்களுக்கும் தொடர்பு எதுவுமில்லை என்பதை நாம் அடுத்தப்பகுதியில் விளக்குவோம். அப்போது அந்த கட்டுரையின் யதார்த்தம் என்ன என்பது உலகிற்கு விளங்கும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக" பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை
நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

"பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்"?.
அவர் பதிலளித்தார்.
"நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்"

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல்
சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக்
கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்."எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்."

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.

ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

I A S தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து IAS அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு
செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?
1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும். (இங்குதான் அதாவது
மூன்றாவது கருத்துக்குதான் நேசக்குமாரர் விமர்சனக்கட்டுரை வெளியிட்டுள்ளார். அதை அடுத்துப் பார்ப்போம்)

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரியும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை
ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடைஉடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு
பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் நேசக்குமாரர்கள் அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று முன்பு கேள்வி வைத்தோம். நேசக்குமாரர் பதில் சொல்லவில்லை.
" அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் போய் ஜோலியை பாப்பியலா" என்று அழகுத் தமிழில் முழங்கிய அந்தப் பெண்ணும் இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.

பர்தா கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்கியுள்ளதா... நேசக்குமாரர் முன் வைத்துள்ள கருத்துக்களை இனி பார்ப்போம்.

Friday, December 17, 2004

பெண் உடையும் - ஆண் உணர்வும்.

எப்படி உடை உடுத்த வேண்டும்? எந்த அளவு மறைக்க வேண்டும் என்பதை ஒவ்வாரு பெண்ணும் தனக்குத் தானே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற (பெண்ணுரிமைக்?) கருத்தை முன் மொழிபவர்கள் 'உடை எதற்கு?" என்ற கேள்வியை ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அழகிற்காக...
அழகியல் என்பது உயிரினம் விரும்பும் ஒரு உணர்வுப்பூர்வமான கலையாகும். ஒவ்வொருவரும் முனைப்புடன் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்கு தயாரானால் அதை குற்றம் சொல்பவர்கள் அழகியலை அறியாதவர்களாகி விடுவார்கள். அந்த வகையில் ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்காக எந்த உடையையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அழகிற்காக மட்டும்தான் ஆடை என்ற நிலை இருந்தால் தான் இந்த வாதம் பொருந்தும். அழகியலுக்காக மட்டும்தான் உடை என்று எந்த பெண்மையும் கூறத் துணியாது என்று நம்புகிறோம்.

உடலை மறைக்க...
அழகியலுக்காக ஆடை என்பதை விட உடலை மறைப்பதற்குத்தான் ஆடை என்பது அதை விட முக்கியத்துவம் பெறுகிறது.

மனிதன் பிறக்கும் போது நிர்வாணமாக பிறக்கிறான். அவன் நிர்வாணமாக பிறந்து விட்டான் என்பதற்காக அவனை நிர்வாணமாகவே யாரும் வைத்துக் கொள்வதில்லை. பிறந்தவுடன் துணி சுற்றப்பட்டு நிர்வாணம் மறைக்கப்பட்டு விடுகிறது. இதற்கு மேலதிக காரணங்கள் கூட இருக்கலாம். காரணம் எத்துனையாக இருந்தாலும் நிர்வாணத்தை மறைத்தல் என்பது அதில் பொதிந்துதான் உள்ளது. பிறந்ததிலிருந்து உடலோடு உறவாட துவங்கிய உடை மனிதன் மரணித்த பிறகும் அவனை அடக்கம் செய்யும் வரை (சில நம்பிக்கைப்படி எரிக்கும் வரை) அவன் உடலை மூடி மறைத்து நிற்கிறது. அவன் தான் மரணித்து விட்டானே.. என்பதற்காக யாரும் அவனை நிர்வாணமாகப் போட்டு விடுவதுமில்லை.

மானத்தை மறைக்கவே உடை என்ற வார்த்தைதான் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் நாம் அந்த வார்த்தையை இங்கு பயன்படுத்தவில்லை. காரணம் மானம் என்றால் என்ன? என்று அடுத்து ஒரு கேள்வி வந்துவிடக கூடாது என்பதற்காகத்தான்.

உடலை மறைப்பதற்கு தான் உடை என்றால் 'எதற்காக உடலை மறைக்க வேண்டும்' என்ற கேள்வியையும் அறிவார்ந்த பெண்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.

அடுத்தவர்கள் முகம் சுளிக்காமலிருக்க,அடுத்தவர்களை தொந்தரவுபடுத்தாமலிருக்க,அடுத்தவர்களை வரம்புமீற விடாமலிருக்க,அடுததவர்களை மனபாதிப்புக்குள்ளாக்காமலிருக்க,இப்படி எத்துனையோ 'அடுத்தவர்களை' இங்கு எடுத்துக்காட்டி விடலாம்.
இந்த 'அடுத்தவர்களில்' உடன் பிறந்தவர்கள். குடுபத்தார். சுற்றத்தார்.வெளி மனிதர்கள் என்று அனைவரும் இடம் பெற்றுக் கொள்வர்.

குளிக்கும் போது பயன்படுத்தும் ஒற்றை உடையுன் ஒரு பெண் வீட்டின் உள்ளே இருந்துக் கொண்டு 'நான் தான் உடை உடுத்தியுள்ளேனே..' என்று தத்துவம் பேசமாட்டாள். பேசினாலும் அதை வீட்டார்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

கணவனிடம் நெருக்கமாக இருக்கும் போது உள்ள குறைந்த அளவு ஆடையுடன் ஒரு பெண் வெளிப்பட்டு 'மறைய வேண்டியது மறைந்துதான் உள்ளது' மேலதிக உடை தேவையில்லை. நான் இப்படியே சுற்றி வருகிறேன்' என்று முடிவு செய்ய மாட்டாள்.

குளிககும் சந்தர்பங்கள் போன்ற தனிமையும - கணவனோடு இருக்கும் போதும் - வீட்டில் பிறருக்கு (கூட பிறந்தவர்கள்) மத்தியிலிருக்கும் போதும் பெண்ணின் உடையில் வித்தியாசம் அவசியம் தேவைப்படுகிறது.

மாராப்பு விலகிய நிலையில் ஒரு பெண்ணை அவளது சகோதரன் பார்த்தால் முகம் சுளிப்பான். அவளுக்கு உணர்த்துவான். அதேநிலையில் வேறொரு ஆண் அவளைப் பார்த்தால் அவன் முகம் மலர்வான். முகம் மலராவிட்டாலும் மனம் அதை ரசிக்கத்தான் செய்யும். இந்த வித்தியாசங்கள் அனைவருக்கும் புரியத்தான் செய்யும். (ஆண் முகம் மலர்வான் என்றவுடன் நேசக்குமாரர்கள் 'ஆண்களெல்லாம் தெருப் பொருக்கிகளா.. காமுகர்களா... என்றெல்லாம் ஆவேசக் கனல் கக்குவார்கள். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் ஆண்களில் யாருமில்லை என்று நேசக்குமாரர்களால் உத்திரவாதம் கொடுக்க முடியாது. பெண்களை குறைவாகக் காட்டி ஆண்களை உசுப்பிவிட்ட 'பாய்ஸ்' திரைப்படத்தை இங்கு நினைவுக் கூறலாம்.)

ஆண்களின் மனநிலை உணரப்படும் போது பெண்கள் கூடுதலாக தனது உடலை மறைக்க வேண்டும் என்ற யதார்த்த நிலை விளங்கும்.

ஆண்களின் மனநிலையை உணர்ந்து அனுபவிக்க முடியாத - வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் பெண்கள் 'எங்கள் உடையை நாங்களே தீர்மானித்துக் கொள்வோம் என்று முடிவெடுப்பது - வாதிப்பது முதிர்சியற்ற நிலையின் வெளிபாடேயாகும்.

பெண்ணை அங்குலம். அங்குலாமாக ரசிக்கக் கூடிய மனநிலையில் இருப்பவன் ஆண். உடை உடுத்திக் கொண்டு போனாலும் உரசிப் பார்ப்போம் என்று உந்தப்படுபவன் ஆண். இடையை பிடிப்பது. பின்புறம் உரசி நிற்பது. கழுத்துப் பகுதியிலும். பிடரியிலும் வெப்பமான மூச்சுக் காற்றை விட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவது. அதுபற்றி நண்பர்களிடம் கமாண்ட்ஸ் அடிப்பது என்று ஆண்களிடமிருந்து பெண்கள் அனுபவிக்கும் பாலியல் சீண்டல்களை - படும் அவதியை சென்னை பஸ் பயணங்கள் கோடிக் கோடியாக கதை சொல்லும்.

ஆண்களும் - பெண்களும் பாலியல் துன்பத்திற்கு ஆளாவதற்கு பெண்களின் உடை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதை பெண்களால் மறுக்க முடியுமா...

பெண்களின் உடம்பும் - உடையும் ஆண் தூண்டப்படுவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது என்ற வாதத்தை இஸ்லாம் முன் வைக்கிறது.
இதற்கு எதிரான வாதங்களை எந்த பெண்ணாவது முன் வைத்தால் இன்னும் கூடுதல் விபரங்களுடன் அவர்களை நாம் சந்திப்போம் இணையத்தில். (தொடர்வோம்)

Monday, December 13, 2004

அவளொரு முஸ்லிம் பெண்

உடை உடுத்தும் மனித பண்பாட்டில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாகிப் போய் நிற்பவள் முஸலிம் பெண் மட்டும் தான். உடுப்பில் வேறு எந்த சமுதாயமும் இந்த அளவு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. நிறைவாகவோ எத்துனை குறைவாகவோ உடுத்திக் கொண்டு வீதி தோரும் அலைந்தாலும் முஸ்லிம் சமுதாயம் உட்பட எந்த ஆணும் இந்த சர்ச்சையில் சிக்குவதில்லை. அப்படியானால் முஸ்லிம் பெண் மட்டும் இதில் ஏன் முதல் பொருளாகிப் போனாள்? என்பதை நாம் சிந்தித்துதான் ஆக வேண்டும்.

அவளொரு முஸ்லிம் பெண்.
  • மதம் என்ற நம்பிக்கையுடனும், சமூகம் என்ற அந்தஸ்துடனும் இயங்கும் மனிதவாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோமேயானால் இஸ்லாத்தை விடுத்து பிற மத சமூக பண்பாட்டில் "அனைத்திலும் நீ இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டும்" என்ற ஒரு அறிவுரை முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மனிதனின் தனி வாழ்வு - பொதுவாழ்விலிருந்து கடவுள் நம்பிக்கை பிரித்தெடுக்கப்பட்டு, அவனது வாழ்க்கை முறையை வேறுபட்ட இரு பிம்பங்களாக்கி வைத்துள்ளது. 'கோயிலில் போய் கும்பிடு அதை கடந்து வந்தப் பிறகு நீ கோபுரத்தில் வாழ்ந்தாலும் சரி, குடிசையில் வாழ்ந்தாலும் சரி அங்கு கோயிலை - கும்பிடும் இறைவனைப் பற்றி நினைக்கத் தேவையில்லை' என்ற நிலையே நீடிக்கிறது. சில - பல சிந்தனையாளர்களால் 'உன் தனிவாழ்விலோ - பொதுவாழ்விலோ இறைவன் தலையிடக் கூடாது" என்ற போதனையும் முன் வைக்கப்படுகிறது. (மசூதியிலும் - கோயிலிலும் மட்டும் குடும்பம் நடத்தும் இறை நம்பிக்கை மனித வாழ்விற்கு தேவைதானா... என்ற சர்ச்சைக்குள் நாம் நுழையவில்லை)

ஆனால் முஸ்லிம் ஆண் - பெண் இவர்களின் நம்பிக்கை "இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டியுள்ளான்" என்பதாகும். (இந்த நம்பிக்கை சரியா.. தவறா.. என்பதை நாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). இந்த நம்பிக்கைத்தான் முஸ்லிம் பெண்களை மற்றப் பெண்களை விட சற்று அதிகமாக உடை உடுத்தத் தூண்டுகிறது. இது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அமைந்த உடையாகும்.

திணிக்கப்படுகிறதா...
  • முஸ்லிம் பெண்கள் விரும்பாத நிலையில் அவர்கள் மீது இந்த உடை திணிக்கப்பட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை சில எழுத்தாளர்கள் அவ்வப்போது முன் வைக்கிறார்கள். விரும்பி ஏற்காத நிலையில் திணிக்கப்படும் எதுவும் நீண்ட காலத்திற்கு நிலைப் பெற்று நிற்காது என்பது மெத்த படித்தவர்களுக்கு விளங்காமல் போய்விட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில் 'நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் " என்ற கூட்டத்தில் நிற்பவர்களாகவே இவர்கள் விளங்குகிறார்கள்.

  • உண்மையில் மத நம்பிக்கை என்ற பெயரில் பெண் விரும்பாத நிலையில் அவள் மீது இத்தகைய உடை திணிக்கப்பட்டிருந்தால் அதற்கெதிராக உலகலாவிய போராட்டம் என்றைக்கோ வெடித்திருக்கும். வெடித்தக் காலங்களிலேயே இந்த திணிப்பு காலாவதியாகிபோயிருக்கும். மத நம்பிக்கை என்ற துவக்கத்திலிருந்து பல நூற்றாண்டுகள் கடந்தப் பிறகும் அந்த மேலதிக உடை புழக்கத்திலிருக்கிறது என்றால் இதை திணிப்பு என்றுக் கூறுபவர்கள் தூர நோக்கு அற்றவர்கள் என்பதே பளிச்சிடுகிறது.

எந்தத் திணிப்பாவது நீண்டகாலம் வாழ்ந்த - வாழ்கின்ற வரலாற்றை எடுத்துக் காட்டுங்களேன் பார்ப்போம்.


வழக்குகள் ஏதும் உண்டா...?

  • பெண்களுக்கு எதிராக நடக்கும் அனேக கொடுமைகள் வழக்குகளாக்கப்பட்டு பின்னர் வரலாற்று நிகழ்வுகளின் கசங்கல்களாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் பதிவு செய்யப்படுகின்றன. "மேலதிக உடை எங்களுக்கு சுமையானவை - அடிமைத்தனமானவை" என்று முறையிடப்பட்ட, எதிர்க்கப்பட்ட வழக்குகளும் - சம்பவங்களும் உலகில் எத்துனை என்பதை யாராவது எடுத்துக் காட்ட முடியுமா... " முக்காடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது" என்று சில நாடுகளில் பள்ளியின் நிர்வாகம் கட்டளையிட்டபோது 'எங்கள் தலை முந்தானைகளால் உங்கள் பள்ளிக் கூடத்திற்கு எத்தகையக் கெடுதியும் வரைப்போவதில்லை. அதே சமயம் நீங்கள் எங்கள் முக்காடுகளை கழற்றுவதன் மூலம் எங்கள் மனங்களைப்புண்படுத்துகிறீர்கள்" என்ற எதிர்வாதம் மாணவிகளால் முன்வைக்கப்பட்ட சம்பவங்களையும் - நிர்வாகம் முக்காடை கழற்றுவதில் குறியாக நின்றபோது மாணவிகள் நீதி மன்றத்தை அணுகுகிறார்கள் என்ற சம்பவத்தையும் தான் உலகம் கண்டு வருகிறது.
  • இஸ்லாமிய நீதி மன்றங்கள் - இந்திய நீதி மன்றங்கள் - உள்ளுர் ஜமஅத்துகள் இங்கெல்லாம் ஜீவனாம்சம் உட்பட தலாக், சொத்து போன்ற வழக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை கனிசமான அளவைப் பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. இதே இடங்களில் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடைகளுக்கு எதிராக தொடுத்த வழக்குகள் எத்துனை?


தீர்மாணிக்க வேண்டியது பெண்களா..?

  • பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று ஆண்கள் பேசக்கூடாதாம். பெண்கள் தான் பேச வேண்டுமாம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமாம். கருத்து முன் வைக்கப்பட்டு அது ஆமோதிக்கவும் பட்டுள்ளது.முஸ்லிம் பெண்கள் பேச துவங்கி "புர்காவே புண்ணியம்" 'புர்காவே கண்ணியம்" என்று ஓட்டுப்போட்டு விட்டால் பெண்ணினம் அனைத்தும் அதை ஒப்புக் கொண்டு அதை அணிய துவங்கி விடுமா...? முஸ்லிம் பெண்கள்தான் பேச வேண்டும் என்ற கருத்து ஏன் வைக்கப்படுகிறது? அவள் புர்கா என்பது அடிமைத்தனம் என்று கூறிவிடுவாள் அந்த கருத்தை வைத்தே புர்காவைக கழற்றி பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்திலா..

  • அவளாக விரும்பி அணியும் உடைப் பற்றி அவளே விமர்சிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை மனநிலையைக் காட்டுகிறது என்பது உலகிற்கு புரியாமல் இல்லை.
    பெண்களின் உடையை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டுமா... இனி பார்ப்போம்.

Thursday, December 09, 2004

புத்தகங்களின் மறுவாசிப்பாக நேச குமார்

நேச குமாரர் புத்தகங்களின் மறுவாசிப்பாக தனது கருத்துக்களை வைத்துள்ளார். வாசிப்பதை வாசித்த மாதிரியே வெளிப்படுத்துவதற்கும் வாசித்ததை சிந்தித்து அந்த சிந்தனையை வெளிப்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. இன்றைய நேசக்குமாரரின் கருத்துக்களை படித்து விட்டு அந்த கருத்துக்கள் பிடிக்காத ஒரு முஸ்லிம் அவரை கேவலமாக சித்தரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பிற்கால வாசகர்கள் 'நேசக்குமாரர் பற்றி கேவலமாக முன் வைக்கப்பட்ட கருத்துகளை படித்து விட்டு அதையே மறுவாசிப்பாக வெளிப்படுத்துகிறார்கள் என்றால் இப்போது நேசக்குமாரரின் தத்ரூபமான நிலை அந்த கேவலமான சித்தரிப்புதான் என்று சொல்லிவிட முடியுமா..?' நேசக்குமாரரால் அதை ஏற்க முடியுமா...

இஸ்லாம் பற்றி - இறைத்தூதர் பற்றி அவர் முன் வைத்துள்ள கருத்துக்கள் இந்த அடிப்படையில் அமைந்தவைதான்.

சகோதரா... நேசக்குமாரா.. விமர்சனங்கள் ஆரோக்யமானவை என்றால் அவற்றை சந்திக்க அனேக முஸ்லிம்கள் தயாராக இருக்கிறார்கள்.

அவர்களுடன் நானும் விரைவில் பங்குப்பெறுவேன்.

செஞ்சுடர்.

Wednesday, December 08, 2004

நேசக்குமாரருக்கு....

நேசக்குமாரருக்கு ஒரு கேள்வி
திண்ணையில் வெளிவந்த உங்கள் புர்கா - பர்தா கட்டுரைக் கண்டேன்.

இஸ்லாம் தீர்மானிக்கும் பெண்களின் உடைப்பற்றிய விவாதத்திற்கு செல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி.

உங்களின் கல்வி மற்றும் சிந்தனை, நீங்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்தம் இவற்றின் அடிப்படையில் பெண்களின் உடை எவ்வாறு அமைய வேண்டும்?, எதிலிருந்து எதுவரை மறைக்கப்பட வேண்டும்? உடையின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் விளக்க வேண்டும். பின்னர் இஸ்லாமிய உடைப் பற்றிய உங்கள் கருத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அலசலாம்.

செஞ்சுடர்.