சுடர்

செஞ்சுடரின் சிந்தனைகள்

Monday, December 13, 2004

அவளொரு முஸ்லிம் பெண்

உடை உடுத்தும் மனித பண்பாட்டில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாகிப் போய் நிற்பவள் முஸலிம் பெண் மட்டும் தான். உடுப்பில் வேறு எந்த சமுதாயமும் இந்த அளவு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. நிறைவாகவோ எத்துனை குறைவாகவோ உடுத்திக் கொண்டு வீதி தோரும் அலைந்தாலும் முஸ்லிம் சமுதாயம் உட்பட எந்த ஆணும் இந்த சர்ச்சையில் சிக்குவதில்லை. அப்படியானால் முஸ்லிம் பெண் மட்டும் இதில் ஏன் முதல் பொருளாகிப் போனாள்? என்பதை நாம் சிந்தித்துதான் ஆக வேண்டும்.

அவளொரு முஸ்லிம் பெண்.
 • மதம் என்ற நம்பிக்கையுடனும், சமூகம் என்ற அந்தஸ்துடனும் இயங்கும் மனிதவாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோமேயானால் இஸ்லாத்தை விடுத்து பிற மத சமூக பண்பாட்டில் "அனைத்திலும் நீ இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டும்" என்ற ஒரு அறிவுரை முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மனிதனின் தனி வாழ்வு - பொதுவாழ்விலிருந்து கடவுள் நம்பிக்கை பிரித்தெடுக்கப்பட்டு, அவனது வாழ்க்கை முறையை வேறுபட்ட இரு பிம்பங்களாக்கி வைத்துள்ளது. 'கோயிலில் போய் கும்பிடு அதை கடந்து வந்தப் பிறகு நீ கோபுரத்தில் வாழ்ந்தாலும் சரி, குடிசையில் வாழ்ந்தாலும் சரி அங்கு கோயிலை - கும்பிடும் இறைவனைப் பற்றி நினைக்கத் தேவையில்லை' என்ற நிலையே நீடிக்கிறது. சில - பல சிந்தனையாளர்களால் 'உன் தனிவாழ்விலோ - பொதுவாழ்விலோ இறைவன் தலையிடக் கூடாது" என்ற போதனையும் முன் வைக்கப்படுகிறது. (மசூதியிலும் - கோயிலிலும் மட்டும் குடும்பம் நடத்தும் இறை நம்பிக்கை மனித வாழ்விற்கு தேவைதானா... என்ற சர்ச்சைக்குள் நாம் நுழையவில்லை)

ஆனால் முஸ்லிம் ஆண் - பெண் இவர்களின் நம்பிக்கை "இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டியுள்ளான்" என்பதாகும். (இந்த நம்பிக்கை சரியா.. தவறா.. என்பதை நாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). இந்த நம்பிக்கைத்தான் முஸ்லிம் பெண்களை மற்றப் பெண்களை விட சற்று அதிகமாக உடை உடுத்தத் தூண்டுகிறது. இது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அமைந்த உடையாகும்.

திணிக்கப்படுகிறதா...
 • முஸ்லிம் பெண்கள் விரும்பாத நிலையில் அவர்கள் மீது இந்த உடை திணிக்கப்பட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை சில எழுத்தாளர்கள் அவ்வப்போது முன் வைக்கிறார்கள். விரும்பி ஏற்காத நிலையில் திணிக்கப்படும் எதுவும் நீண்ட காலத்திற்கு நிலைப் பெற்று நிற்காது என்பது மெத்த படித்தவர்களுக்கு விளங்காமல் போய்விட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில் 'நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் " என்ற கூட்டத்தில் நிற்பவர்களாகவே இவர்கள் விளங்குகிறார்கள்.

 • உண்மையில் மத நம்பிக்கை என்ற பெயரில் பெண் விரும்பாத நிலையில் அவள் மீது இத்தகைய உடை திணிக்கப்பட்டிருந்தால் அதற்கெதிராக உலகலாவிய போராட்டம் என்றைக்கோ வெடித்திருக்கும். வெடித்தக் காலங்களிலேயே இந்த திணிப்பு காலாவதியாகிபோயிருக்கும். மத நம்பிக்கை என்ற துவக்கத்திலிருந்து பல நூற்றாண்டுகள் கடந்தப் பிறகும் அந்த மேலதிக உடை புழக்கத்திலிருக்கிறது என்றால் இதை திணிப்பு என்றுக் கூறுபவர்கள் தூர நோக்கு அற்றவர்கள் என்பதே பளிச்சிடுகிறது.

எந்தத் திணிப்பாவது நீண்டகாலம் வாழ்ந்த - வாழ்கின்ற வரலாற்றை எடுத்துக் காட்டுங்களேன் பார்ப்போம்.


வழக்குகள் ஏதும் உண்டா...?

 • பெண்களுக்கு எதிராக நடக்கும் அனேக கொடுமைகள் வழக்குகளாக்கப்பட்டு பின்னர் வரலாற்று நிகழ்வுகளின் கசங்கல்களாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் பதிவு செய்யப்படுகின்றன. "மேலதிக உடை எங்களுக்கு சுமையானவை - அடிமைத்தனமானவை" என்று முறையிடப்பட்ட, எதிர்க்கப்பட்ட வழக்குகளும் - சம்பவங்களும் உலகில் எத்துனை என்பதை யாராவது எடுத்துக் காட்ட முடியுமா... " முக்காடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது" என்று சில நாடுகளில் பள்ளியின் நிர்வாகம் கட்டளையிட்டபோது 'எங்கள் தலை முந்தானைகளால் உங்கள் பள்ளிக் கூடத்திற்கு எத்தகையக் கெடுதியும் வரைப்போவதில்லை. அதே சமயம் நீங்கள் எங்கள் முக்காடுகளை கழற்றுவதன் மூலம் எங்கள் மனங்களைப்புண்படுத்துகிறீர்கள்" என்ற எதிர்வாதம் மாணவிகளால் முன்வைக்கப்பட்ட சம்பவங்களையும் - நிர்வாகம் முக்காடை கழற்றுவதில் குறியாக நின்றபோது மாணவிகள் நீதி மன்றத்தை அணுகுகிறார்கள் என்ற சம்பவத்தையும் தான் உலகம் கண்டு வருகிறது.
 • இஸ்லாமிய நீதி மன்றங்கள் - இந்திய நீதி மன்றங்கள் - உள்ளுர் ஜமஅத்துகள் இங்கெல்லாம் ஜீவனாம்சம் உட்பட தலாக், சொத்து போன்ற வழக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை கனிசமான அளவைப் பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. இதே இடங்களில் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடைகளுக்கு எதிராக தொடுத்த வழக்குகள் எத்துனை?


தீர்மாணிக்க வேண்டியது பெண்களா..?

 • பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று ஆண்கள் பேசக்கூடாதாம். பெண்கள் தான் பேச வேண்டுமாம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமாம். கருத்து முன் வைக்கப்பட்டு அது ஆமோதிக்கவும் பட்டுள்ளது.முஸ்லிம் பெண்கள் பேச துவங்கி "புர்காவே புண்ணியம்" 'புர்காவே கண்ணியம்" என்று ஓட்டுப்போட்டு விட்டால் பெண்ணினம் அனைத்தும் அதை ஒப்புக் கொண்டு அதை அணிய துவங்கி விடுமா...? முஸ்லிம் பெண்கள்தான் பேச வேண்டும் என்ற கருத்து ஏன் வைக்கப்படுகிறது? அவள் புர்கா என்பது அடிமைத்தனம் என்று கூறிவிடுவாள் அந்த கருத்தை வைத்தே புர்காவைக கழற்றி பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்திலா..

 • அவளாக விரும்பி அணியும் உடைப் பற்றி அவளே விமர்சிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை மனநிலையைக் காட்டுகிறது என்பது உலகிற்கு புரியாமல் இல்லை.
  பெண்களின் உடையை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டுமா... இனி பார்ப்போம்.

4 Comments:

 • At 6:22 AM, Blogger மாமன்னன் said…

  நானும் விரைவில் பங்குப்பெறுவேன்.

   
 • At 7:32 AM, Blogger அபூ முஹை said…

  அழகானக் கருத்துக்கள்.
  ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம். ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமைகளைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது! என்று முற்போக்கு(?) வாதிகளும் அறிவு(?) ஜீவிகளும் கூப்பாடு போடுகின்றனர்.

  முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் இவர்களுக்கென்ன அக்கறையோ?

  செஞ்சுடரே, தொடருங்கள், வாழ்த்துக்கள்!

  அன்புடன்
  அபூ முஹை

   
 • At 4:43 PM, Blogger வித்யாசாகரன் (Vidyasakaran) said…

  Please don't mistake me for opposing your opinions just for the sake of it.
  I try to understand things in your perspective and hope you might have thought of my questions well before and I'm eager to know your answers.
  1. You say, "thinikkappadum ethuvum neenda kaalam niRkaathu". But, do you think dowry system is liked by women? How come it continues to be there? Because, I feel,
  a. There are people who are interested in continuing this and they happen to be stronger.
  b. There are people who identify themselves with this and feel it their duty to follow old ways and impose them on everyone else, though incorrect

   
 • At 8:32 PM, Blogger சுடர் said…

  அவளொரு முஸ்லிம் பெண்
  உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் என்னை தவறாக எண்ணவேண்டாம், உங்களின் கருத்துக்களை அறிந்துக்கொள்ள முயற்சி செய்கிற அதே வேளையில், உங்களுக்கு தெரிந்த சில பதில்களை நானும் தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

  "திணிக்கப்படும் எல்லாமே நீண்ட காலம் நிற்காது" - அப்படியென்றால் வரதட்சணை முறையை பெண்கள் விரும்புகிறார்களா? எப்படி அது தொடர்ந்து கொண்டிருக்கிறது?,

  நான் நினைக்கிறேன்:
  a) சிலர் அத்தகைய முறைகளை தொடர விரும்புகிறார்கள். அதனால் அது மேலும் நிலைத்துவிடுகிறது.

  b) சிலர் அத்தகைய முறைகளால் தங்களை அடையாளம் காணுகிறார்கள். மேலும் அத்தகைய பழமையான வழிகளை பின்பற்றுவது தங்களின் கடமை என நினைத்து அதனை பிறர்மேல் திணிக்கிறார்கள,் அது தவறானதாக இருந்தும் கூட.

  - வித்யசாகரன்

  உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் நல்ல சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் அத்தகைய கருத்துக்களை முன் மொழியும் உங்களை மீண்டும் ஒரு முறை வரவேற்றுக் கொள்கிறேன்.

  1)வரதட்சனை திணிக்கப்பட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை. அது நீடிப்பதற்கு அனைவரும் அதை ஏற்றுக் கொண்டதுதான் காரணம் என்று கருத வேண்டாம். வரதட்சனைக்கு எதிரரக குற்றவியல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை - தண்டனை என்று அனேக எதிர்ப்பு அத்தியாயங்கள் அதற்கு உள்ளன. முஸ்லிம்களில் குர்ஆனும் - இறைத்தூதரின் வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்று ஏற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்யும் மொத்த முஸ்லிம்களும் வரதட்சனையை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள். அனேக ஊர்களில் ஊரின் பொது அமைப்பு (ஜமாஅத்)கள் வரதட்சனை பெரும் திருமணங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளார்கள். இதனால் வரதட்சனை திருமணங்கள் கணிசமாக குறைந்துள்ளன. மட்டுமின்றி பலநூறு சகோதரர்கள் "நாங்கள் அறியாமையால் வரதட்சனை வாங்கி விட்டோம் எங்களை பொருத்தவரை அது கடன் அந்த கடனை நாங்கள் அடைத்து விடுவோம் என்று உறுதிமொழி எடுத்து அதை நிறைவேற்றியும் வருகிறார்கள். எனவே திணிக்கப்பட்டாலும் மொத்த சமுதாயமும் அதை ஏற்றுக் கொண்டது என்ற வாதம் தவறு என்று கருதுகிறேன்.

  இருந்தும் அது நீடிக்கிறது என்றால் அது அங்கீகாரத்தின் அடையளமல்ல. சிரமமின்றி கிடைப்பதால் பெற்றுக் கொள்பவர்களுக்கு எந்த வலியும் தெரிவதில்லை. அதுதான் வரதட்சனை நீடிப்பதற்கு காரணமாகும். மட்டுமின்றி திருமணத்திற்கு பிறகு மகன் மனைவியுடன் போய்விடலாம் என்ற பயம் கூட சில இடங்களில் வரதட்சனைப் பெறுவதற்குரிய காரணமாக முன் வைக்கப்படுகிறது.

   

Post a Comment

<< Home