சுடர்

செஞ்சுடரின் சிந்தனைகள்

Saturday, March 26, 2005

முஸ்லிம் பெண்கள் - வணங்கும் உரிமைகள்.

முஸ்லிம் பெண்கள் வணங்கும் உரிமைகள்

பிற சில மதங்களில் பெண்களை இரண்டாம் தர பிறவிகளாக பாவித்து அவர்களுக்குரிய உரிமைகளைக் கண்டுக் கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளி வைத்துள்ளதை அளவு கோலாக கொண்டு முஸ்லிம்களில் பலர் தம் பெண்களை அதே நிலையில் வைத்துள்ளார்கள்.

பெண்களுக்குக்கென்று அவர்களுக்கு தேவையான உரிமைகள் குறைவில்லாமல் இங்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் பெருவாரியான ஆண்கள் அது குறித்தெல்லாம் கவலைப்படுவதே இல்லை. இது அவர்களிடம் இஸ்லாமிய அறிவின்மைக்குரிய அடையாளங்களாகும். முஸ்லிம் பெண்களும் கூட அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் விழிப்புணர்வு பெற்ற சில பெண்கள் தங்களின் உரிமைகளை முறையாக பெறுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்கள். அதில் ஒன்றுதான் பள்ளிவாசல்களுக்கு சென்று ஆண்களுடன் பெண்கள் தொழும் உரிமை.

சிந்திக்கத் தெரிந்த இந்த பெண்களின் போக்கு, பிறரால் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்களின் கைப்பாவையாக இருக்கும் மௌட்டீக மரபை பின்பற்றும் ஆண்களுக்கு பிடிக்கவில்லை. பெண்களை பள்ளி வாசல்களுக்கு வர விடாமல் தடுத்து நிறுத்தும் பணியில் அவர்கள் அவ்வப்போது இறங்கி எவராவது சொல்லி வைத்திருக்கும் ஆணாதிக்கக் கருத்துக்களை தங்களுக்கு சாதகமாக வெளியிடுவார்கள். (இதற்காகத்தான் இஸ்லாமிய அறிவும், சிந்தனையும் அற்றவர்களாக பார்த்து அதிகாரம் வழங்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்)

எனவே ஆண்களோடு கூட்டாக இறைவனை வணங்கும் உரிமைகளை முஸ்லிம் பெண்கள் எந்த அளவு பெற்றுள்ளார்கள் என்பதை விளாவாரியாக விளக்கும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.

இதை மிக சரியாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பெண்கள் தங்கள் உரிமையை எப்படி நடை முறைப்படுத்தினார்கள் என்ற வரலாற்று செய்திகளே சரியான அளவுகோலாகும். அவற்றை வரிசையாக விளங்கினாலே வணங்கும் உரிமைகளுக்குறிய முழு தெளிவும் கிடைத்து விடும்.

பள்ளிக்கு வரும் உரிமை.

இறைவனின் வணக்கஸ்தலங்களில் இறைவனின் பெயரை துதிப்பதை தடுத்து அவற்றை பாழாக்க முயற்சிக்கிறானே அவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்..? (அல்குர்ஆன் 2:114) என்று இறைவன் கேட்கிறான்.
இறைவனை வணங்குவதற்காக பள்ளிவாசல்களுக்கு வரும் இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம் பெண்களை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்பதற்கு இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்து விட்டது. மீறி தடுப்பவர்கள் என்ன அதிகாரம் பெற்றிருந்தாலும் இறைவனின் பார்வையில் அவர்கள் பெரும் அநியாயக்காரர்களாகி விடுகின்றனர்.

உங்கள் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி கேட்டால் (கணவர்களாகிய) நீங்கள் அவர்களை தடுக்க வேண்டாம் என்பது நபிமொழி. (இப்னு உமர்(ரலி) புகாரி 865,873,5238)

கணவர்களே நீங்கள் தடுக்க வேண்டாம் என்பது கணவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காக சொல்லி விட்டு செல்ல வேண்டும் என்ற அறிவுரை தான். நபி(ஸல்) அவர்களுடைய அனுமதி கிடைத்து விட்ட பிறகு ஒரு பெண் பள்ளிக்கு சென்று வந்தால் அதை கணவர் குறை சொல்லக் கூடாது என்பதற்கு கீழுள்ள நபித் தோழியின் வாக்கு மூலம் சிறந்த சான்று.

உமர் அவர்களின் மனைவியரில் ஒருவர் சுப்ஹ் மற்றும் இஷா தொழுகைகளை பள்ளியில் ஜமாஅத்துடன் தொழ செல்வார். பள்ளிக்கு தொழ செல்கிறீர்களே உமர் ரோஷக்காரராச்சே.. என்று அந்த மனைவியிடம் கேட்ட போது, அவர் 'என் கணவர் என்னை தடுக்க முடியாது ஏனெனில் பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்' என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 900)

பகல் நேரத் தொழுகைகள் மட்டுமில்லாமல் இரவுத் தொழுகைகளிலும் மற்றும் ரமளானின் இரவுத் தொழுகைகள் ஆகியவற்றிர்க்கும் பெண்கள் செல்லலாம்.

இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்காதீர்கள் என்பது நபிமொழி. (இப்னு உமர்(ரலி) புகாரி 899)

நபி(ஸல்) அவர்களுக்கு பின் அவர்களை பின்பற்றி பெண்கள் சுப்ஹ் தொழுகையில் பங்கெடுப்பார்கள். தொழுகை முடிந்து போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு திரும்புவார்கள். அந்த நேரம் இருட்டாக இருப்பதால் அவர்கள் யார் என்பதை அறிய முடியாது என்று ஆய்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 372,578,867,872)

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் இஷா தொழுகையை தாமதப் படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர் என்று உமர்(ரலி) நினைவூட்டியதும் வந்து தொழவைத்தார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி 566, 569, 862, 864)
இரவும் இருட்டும் கூட பெண்கள் பள்ளிக்கு வந்து வணங்கும் உரிமையை தடுத்துவிடாது என்பதற்கு இவை சான்றுகளாகும்.

தொழுகையை சுருக்குவதற்கு காரணம்.

நீண்ட நேரம் தொழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் தொழுகையை துவங்குகிறேன். குழந்தைகளின் அழுகுரலை கேட்கும் போது அதனால் தாய்க்கு சங்கடம் ஏற்படுமோ என்ற கவலையால் தொழுகையை சுருக்கி விடுகிறேன் என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். (புகாரி 707, 709, 710, 868)

இமாமின் தவறுகளை சுட்டிக் காட்டிய பெண்கள்.

உங்களில் அதிகம் குர்ஆன் ஓத தெரிந்தவர் இமாமத் செய்வதற்கு முதலாவது தகுதி படைத்தவர் என்று நபி(ஸல்) கூறியுள்ளதை கருத்தில் கொண்டு ஒரு முறை இமாமத் செய்வதற்கு ஆட்களை தேடினார்கள். அன்றைக்கு அதிக குர்ஆன் ஓத தெரிந்தவனாக நான் இருந்தேன். ஆறு அல்லது ஏழு வயதுடைய என்னை இமாமத்திற்காக முன் நிருத்தினார்கள். நான் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு தொழ வைத்தேன் ஸஜ்தா செய்யும் போது அந்த போர்வை என்னை விட்டு விலகி என் பின்புறம் தெரியும். அப்போது பின்னால் தொழுத பெண்களில் ஒருவர் 'உங்கள் இமாமின் பின்புறத்தை மறைக்க (ஏதாவது கொடுக்கக்)கூடாதா..' என்றார் உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டை கொடுத்தனர். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. (அம்ர் பின் ஸலாமா(ரலி) புகாரி 4302)

சிலபோது போதிய உடையில்லாமல் ஆண்கள் தொழும் நிலை ஏற்பட்டது. இருக்கும் ஒரு வேட்டியை தங்கள் உடம்பில் சுற்றி கழுத்துக்கு பின்புறம் பிடரியில் கட்டிக் கொள்வார்கள். இதை கண்ட நபி(ஸல்) அவர்கள் 'பெண்களே! ஆண்கள் நிலத்திலிருந்து தலையைத் தூக்கி எழுந்து அமரும் வரை நீங்கள் தலையை தூக்க வேண்டாம்' என்றார்கள். (ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) புகாரி 362, 814)

பெருநாள் தொழுகைகளில் பெண்கள்.

கன்னிப் பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்டுள்ளப் பெண்களையும், கணவனை இழந்தப் பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக வந்து சேருமாறு நபி(ஸல்) கூறினார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர், 'இறைவனின் தூதரே! எங்களில் ஒருத்திக்கு போதிய அளவு ஆடை இல்லை என்றால் எப்படி வருவது..?' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) 'அவளது தோழியிடம் அதிகப்படியான மேலாடை இருந்தால் அதை அவள் அணிய கொடுக்கட்டும்' என்றார்கள். (உம்மு அதிய்யா(ரலி) புகாரி 351)

(குறிப்பு: மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுக்கு தொழுகை கடமையில்லை என்பதால் அவர்கள் தொழுகையில் பங்கெடுக்காமல் தொழுத பின் நடைப் பெறும் இஸ்லாமிய பிரச்சாரத்திலும் - தங்களுக்கு தேவையான பிரார்த்தனையிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்)

பெருநாள் தொழுகை முடிந்ததும் நபி(ஸல்) பெண்களின் பகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள். இறைவனின் பாதையில் செலவு செய்யும் அவசியத்தை விளக்கினார்கள். இதை செவியுற்ற பெண்கள் தங்கள் காது, கைகளில் இருந்த ஆபரணங்களை - நகைகளை - கழற்றி இறைவனின் பாதையில் கொடுத்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 863, 978, 979, 981)

பள்ளியை சுத்தம் செய்ய பெண்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளியை சுத்தம் செய்ய ஒரு பெண் நியமிக்கப்பட்டிருந்தார் என்ற விபரம் புகாரியில் வருகிறது (அபூஹூரைரா(ரலி) 458,460)

பள்ளிக்கு வர அனுமதி உண்டு என்பதால் அங்கு வந்து தன்னை வருத்திக் கொள்ளும் நிலையில் வணக்கத்தில் மூழ்கி விடக் கூடாது என்று நபி(ஸல்) கண்டித்த விபரமும் கிடைக்கின்றது

பி(ஸல்) பள்ளிக்கு வந்த போது இரண்டு தூண்களுக்கிடையே நீண்ட கயிறு ஒன்றை பார்த்தார்கள். 'இது என்ன..?' என்றார்கள். அதற்கு மக்கள் 'இது ஜைனப் உடையது, நின்று தொழுவார் சோர்வடைந்தால் இந்த கயிற்றைப்படித்துக் கொண்டு சாய்ந்துக் கொள்வார் ' என்றனர். இதை கேட்ட நபி(ஸல்) அவர்கள் 'இதை அவிழ்த்து எறியுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும் போது தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விடட்டும்' என்றார்கள். (அனஸ்(ரலி) புகாரி 1150)

இந்த ஆதாரங்களை படித்துணரும் எந்த முஸ்லிமும் பெண்கள் பள்ளிக்கு செல்வது தவறு என்று தடுக்க மாட்டான் ஏனெனில் அதுதான் இறை நம்பிக்கைக்குரிய அடையாளமாகும்.

இறைவனும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால் அக்காரியத்தில் மாற்று கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிக்கைக் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எவராவது மாறு செய்தால் அவர்கள் பகிரங்க வழி கேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33:36)

முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பதன் மூலம் தடுப்பவர்கள் இஸ்லாத்திற்கே கலங்கம் விளைவிக்கிறார்கள் என்பதுதான் உண்மைSunday, March 20, 2005

முதிர் குழந்தைகள்

'ஏய் அம்மாவின் புடவ கலர்ல வானம் இருக்குடி' 'ஆமாம்டா அதில் விதவிதமா யாரோ ஓவியம் வரைஞ்சிருக்காங்க பாரு' தன் குழந்தைகள் வானத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததை கண்ட பெற்றோர்களின் மனம் குதூகலித்தது.

அலுவலகத்தின் டென்ஷனுடன் படுக்கையில் சாயும் தந்தையின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து 'யாரு உனக்கு கன்னத்துல தாடி ஒட்டி விட்டாங்க' என்று தன் குழந்தை கேட்கும் அந்த தருணங்களில் அலுவலக டென்ஷன் எல்லாம் பறந்துப் போகும் அந்த விந்தை பெற்றவருக்கு புதிராகவே இருக்கும்.

நேற்றிருந்த அந்த சந்தோஷங்கள் அடியோடு எவரோ திருடிக் கொண்டு போய்விட்ட மாதிரி இல்லங்களிலிருந்து துடைக்கப்பட்டு விட்டன. இன்றைக்கு அந்த பிஞ்சுகளின் மன கிளர்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரமூட்டுவதே வன்முறை விளையாட்டுகள் தான் எனும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.
அடுப்பங்கரையில் இருக்கும் கரண்டிகளை கையில் எடுத்துக் கொண்டு 'டுமீல்' 'டுமீல்' என்று சத்தமிட்டப்படியே தன் சக நண்பர்களை துரத்திக் கொண்டு செல்வது தான் அவர்களை பொருத்தவரை நாகரீக விளையாட்டு.

'டாடி ஒழுங்கா அத கொடுத்துடு இல்லேனா சுட்டு தள்ளிடுவேன்' கையில் இருக்கும் பொருள் தந்தையை நோக்கி உயரும் போது இதை ரசிக்கும் மன நிலை நிச்சயம் பெற்றோருக்கு இருக்காது.

எங்கு தொலைந்து போனது அந்த பிஞ்சுகளின் இயற்கையான மழலைத் தன்மை..?
'என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன்' என்பது போல் எதிரே தொலைக் காட்சிப் பெட்டி.
மூன்று வயது வரை குழந்தைக்கு ஹீரோ அவன் தந்தை தான். யாரும் அவனிடம் வம்பு செய்தால் 'என்கிட்ட வச்சுக்காத.. எங்க டாடிகிட்ட சொல்லிடுவேன்' என்று சொல்லும் அவனுக்கு மூன்று வயது கடந்து விட்டால் பிறகு மனதிலிருந்து பெற்றவரை துரத்தி விட்டு தான் அமர்ந்துக் கொள்ள நிறைய ஹீரோக்கள் வந்து விடுகிறார்கள். அந்த நடிகர்களின் ஆக்ரமிப்பிற்கு பிறகு இவனது நடை உடை பாவனைகள் கூட மாறி தானே அந்த ஹீரோ என்று கற்பனை சினிமா உலகின் உறுப்பினராகிறான்.

பள்ளிக் கூடம் முடிந்து வீடு வந்தது முதல் இரவு தூங்கும் வரை உளவியல் ரீதியாக குழந்தைகளை தாக்கி அவர்களின் பிஞ்சுத் தன்மையை சாகடிக்க வெடிக்காமல் ஆனால் வெடித்துக் கொண்டே இருக்கும் வெடி குண்டாக ஒவ்வொரு வீட்டிலும் மிக தாராளமாக ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது தொலைக் காட்சி.

ஒளிப்பரப்பாகும் சினிமாக்களும் அதில் வரும் வன்முறைகளும் குழந்தைகளின் உள்ளத்தை வெகுவாக கவ்வி பிடித்து அதை நோக்கியே அவர்களை நகர்த்திச் செல்கின்றன.

உடை உடுத்துவது தொலைக் காட்சிக்கு முன்
தலை வாருவது தொலைக் காட்சிக்கு முன்
சாப்பிடுவது தொலைக் காட்சிக்கு முன்
விளையாடுவது தொலைக் காட்சிக்கு முன்
படிப்பது தொலைக் காட்சிக்கு முன்
என்று குழந்தைகளின் மொத்த நேரமும் தொலைக் காட்சி வாழ்க்கையாகவே மாறிக் கொண்டு இருக்கிறது.

தொலைக் காட்சி இயக்குனர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதில்லை. வீட்டிலிருக்கும் பெரியவர்களை விட அதிகமாக தொலைக் காட்சியை பார்க்கும் குழந்தைகள் பெரியவர்களை விட அதிகமாகவே பெரியவர்களின் சமாச்சாரங்களையெல்லாம் கற்றுக் கொண்டு விடுகின்றன என்பது ஆய்வுகளில் வெளி வரும் அதிர்ச்சிகரமான தகவல்களாகும்.

டீ.வி சீரியல்களில் குழந்தைகள் வக்கனையாக பேசுவதை இப்போதெல்லாம் சாதாரணமாக காணலாம். மழலைத் தன்மையின் அடையாளமே இல்லாத வசனங்கள் - நடிப்புகள்.

ஆன்மீகம் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகும் எண்ணிக்கையற்றத் தொடர்களில் கம்ப்யூட்டரால் நடத்தப்படும் 'டெக்னிக்' ஜாலங்கள் குழந்தைகளின் மனங்களில் வேறுவிதமான அதிர்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதன் விளைவை சக்திமான் சீரியல் மூலம் உலகம் கண்டது.
சக்திமான் காப்பாற்றுவார் என்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சிறுவன். அதே நம்பிக்கையில் தீக்குளித்து இறந்த சிறுவன். சக்தி மானை நம்பி சேற்றில் மூழ்கி இறந்துப் போன சிறுவர்கள் என்று தற்கொலை பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட பிஞ்சுகள் அனேகம்.

நம்பிக்கை - விளையாட்டு - பேச்சு - பாவனை - நடவடிக்கை என்று குழந்தைகளின் மொத்த வாழ்வையும் தொலைக் காட்சி கொள்ளையிட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தையில் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் கெட்ட தாயாக, கெட்ட தந்தையாக, கெட்ட நண்பனாக, கெட்ட டீச்சராக, கெட்ட உலகின் வாசலாகவும் வாழ்க்கையாகவும் தொலைக் காட்சிகள் இருக்கின்றன குழந்தைகளுக்கு.

யாழ் இனிது குழல் இனிது என்பார்
மழலைச் சொல் கேளாதோர் - என்ற மழலை மொழியை மனக்கச் செய்யும் பழமொழிகள் வரும் காலத்தில் அர்த்தமற்றுப் போய்விடும் அபாயம் தென்படுகிறது.

யார் பொறுப்பு?

திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பொருத்தவரை அவை சமூக சிந்தனை - குழந்தைகள் நலன் - அவர்களின் எதிர்கால அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படுவதில்லை. எடுக்கப்படுவதில்லை. அவர்களின் குறிக்கோள் எல்லாம் பணம் ஒன்றுதான். இத்தகைய மனிதத்துவம் அற்ற கெடுதியாளர்களிடமிருந்து நம் குழந்தைகளை காப்பாற்றும் முழு பொறுப்பும் பெற்றோர்கள் கைகளில் தான் உள்ளன. இதில் அதிக பொறுப்புக்குரியவர் பெற்றத் தாயே.

'எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே
அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற தமிழ் பாடல் குழந்தை வளர்ப்பில் அன்னையின் பங்கை அழகாக சொல்லியுள்ளது.
குழந்தைகள் பச்சை மண் போன்றவர்கள். அதாவது தாய் என்ற குயவன் கையில் கிடைத்த பச்சை மண். அதை பயன்படும் விதத்தில் உருவாக்கும் கடமைக்குரியவள் தாய் தான்.

நிறையப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்பதே தெரிவதில்லை. ஒன்று அதீத கட்டுப்பாட்டுக்குள் தள்ளி அவர்களை சிந்தனை ரீதியாக வளர விடாமல் தடுத்து அடிமைப்பட வைத்து விடுகிறார்கள். இதன் விளைவு குழந்தைகளின் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன அளவில் இயலாமையும், கோழைத்தனமும், பலவீனமும் ஆட் கொண்டு விடும்.

அல்லது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதும் குழந்தைகளை விடுவித்து விடுவதையும் பார்க்கிறோம். இந்த சுதந்திரம் பெற்றோர்களையே எதிர்த்து சமயம் கிடைக்கும் போது அவர்களை வீட்டை விட்டே துரத்தும் நிலையைக் கூட ஏற்படுத்தி விடும்.
இரண்டு நிலையும் தவறு.
குழந்தைகளை அதி தீவிரமாக கண் காணித்து, அவர்களோடு பழகி, அதட்டி - அரவணைத்து, கண்டித்து - கொஞ்சி, திருத்தி - பாராட்டி பழக வேண்டும். குழந்தைகளிடமிருந்து நாம் ஒதுங்கும் ஒவ்வொரு நிமிடமும் தொலைக் காட்சி அவர்களிடம் நெறுங்குகிறது என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம்.

உண்ணும் போது - படிக்கும் போது - உடை உடுத்தும் போது - விளையாடும் போது தொலைக் காட்சியை அணைத்து விடுங்கள். அந்த நேரங்களில் என்ன பிடித்தமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டாலும் குழந்தைகள் மீது அக்கறையுள்ள தாய் அந்த தொடர்களை புறக்கணித்துத் தான் ஆக வேண்டும்.

பிள்ளைகளை விட தொடர்களே முக்கியம் என்று கருதும் எந்த தாயும் வன்முறை, பாலியல் வக்கிரங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவற்றை நோக்கி தன் குழந்தைகளை தள்ளுகிறாள் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய முதிர் குழந்தைகளின் எதிர்கால வீழ்ச்சிக்கு பெற்ற அன்னையே பொறுப்பேற்க வேண்டும்.

Thursday, March 17, 2005

இறைவனும் - அவன் தன்மைகளும்

உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதத்தினர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். தம்மை படைத்ததும், தமக்கு தேவையானவற்றை கொடுப்பதும், பாவ மீட்சிக்கான வழி காட்டுவதும் கடவுள் சக்திதான் என்று நம்புகின்றனர். ஆனால் அந்த கடவுள் அல்லது இறைவன் என்பவன் யார்? அவன் எத்தகைய ஆற்றல் படைத்தவன் என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்து அறிய மறுக்கிறார்கள். இதற்கு முரட்டு பக்தியோ அதீத பயமோதான் காரணமாக இருக்க முடியும்.

எவ்வித முன் தீர்மானமும் இன்றி திறந்த மனதுடன் இறை நம்பிக்கையின் வரலாற்றை நாம் அணுகும்போது ஒரு உண்மை பளிச்சென்று தெரிகிறது. அதாவது மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட இறைவர்கள், கடவுள்கள் ஏராளம் என்பதுதான் அந்த உண்மை. தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பும் மனிதன் அந்த சக்தியின் இலக்கணத்தை மனித இயல்பிலேயே வகுக்கத் துவங்கி விட்டான்.

சில கடவுள் நம்பிக்கைகளைப் பாருங்கள்..

மனிதனின் சிந்தனை, ஆற்றல், செயலாக்கம் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டது. இது மனிதனின் பலவீனம். இந்த பலவீனங்களே எல்லைச் சாமியையும், எல்லையம்மனையும் தீர்மானிக்கிறது. கடவுளின் சக்தி எப்படி ஓர் எல்லைக்குட்பட்டு இருக்க முடியும்? என்று மனிதன் சிந்திக்கவில்லை.

வசதிக்கேற்ப பூமியின் பல பாகங்களுக்கு இடம் பெயர்ந்த மனிதர்கள் நாளடைவில் குலங்களாக, கோத்திரங்களாக வளர்ந்து நிற்கிறார்கள். இடப்பெயர்ச்சிக்கான காரணத்தையும், வரலாற்றையும் மறந்து போன மனிதன் குலத்திற்கு ஒரு கடவுளை, இறைவனை உருவாக்கிக் கொண்டான்.

குலத்தாலும், கலாச்சாரத்தாலும் மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும் மனிதன் என்கிற இயல்பில் உலக மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது குலத்துக்கு ஒரு கடவுள், இறைவன் எப்படி இருக்க முடியும்? என்று அவன் சிந்திக்கவில்லை. தன் பலவீனத்திலேயே தன் கடவுளை மனிதன் தான் வகுக்கிறான்.

ஆக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் என்று அடுத்து இறைவனுக்குரிய இலக்கணத்தை மனிதன் வகுத்துள்ளான். எந்த ஒரு பொருளை உருவாக்கவும், அதை இயக்கவும், அதை அடியோடு அழிக்கவும் தனி ஒரு மனிதனால் முடியாது. இது அவனது பலவீனம். அவனைப் போன்று அவனோடு இன்னும் பலர் இயங்க வேண்டும். இந்த பலவீனம் அவனாக உருவாக்கிக் கொண்ட இறைவன் விஷயத்தில் பிரதிபளிக்கிறது. ஆக்கும் இறைவனால் - காக்கவும் - அழிக்கவும் முடியாதா? 'முடியும்' என்றால், 'முடியும்' என்ற தன் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்ட பலவீனம் அங்கு நிற்கிறது. 'முடியாது' என்றால், தன்னால் ஒரு காரியத்தை செய்ய முடியாதவன் எப்படி கடவுளாக - இறைவனாக இருக்க முடியும்? என்பதை மனிதன் சிந்திக்க வேண்டும். இங்கும் மனிதன்தான் இறைவனை தன் கற்பனையில் உருவாக்குகிறான் என்பதை புரிய முடிகிறது.
குடும்பஸ்தனாக இறைவன் சித்தரிக்கப்படுவதில் மனிதனின் கற்பனா சக்தி கலை கட்டுகிறது. குடும்பம் அதாவது மனைவி, குழந்தைகள் மனிதனுக்குத் தேவை. அதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அந்த சிக்கல்களையெல்லாம் மறக்கடிக்ககூடிய இன்பம் அதில் குவிந்துக்கிடப்பதால் தான் மனிதனால் குடும்ப வாழ்க்கையை தவிர்க்க முடிவதில்லை. உடல் இச்சை தீர்ந்தால்தான் இவனால் உலகில் சுருசுருப்பாக இயங்க முடியும். மனைவி தேவை என்பதும், குழந்தைகள் தேவை என்பதும் மனிதனின் அசைக்க முடியாத பலவீனங்கள். இந்த பலவீனங்களுக்குட்படுத்தியே இறைவனை இவன் உருவாக்கி விட்டான். இறைவன் அவனுக்கு மனைவி, அவர்களுக்கு மத்தியில் சல்லாபங்கள், ஊடல்கள், ஓய்வுகள், சந்ததிகள் என்று இறைவனிடம் எண்ணற்ற மனித பலவீனங்கள். 'பேசாமல் அவனும் மனிதனாக இருந்துவிட்டுப் போகலாம்' என்ற அளவிற்கு மனித பலவீனங்களால் சூழப்பட்டுள்ளான் மனிதன் உருவாக்கிய இறைவன்.

மகனாக பிறக்கும் கடவுள் !
'கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்' என்று மனித துன்பங்கள் கவிதை வடித்தது. ஆனால் உலகில் பெரும்தொகையினர் ஒரு மனிதரை கடவுளின் மகனாகவே கருதி ஆதாரமில்லாமல் நம்பி வழிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பலவீனமே கடவுள் நம்பிக்கையின் அடையாளமாகிறது. இறைவன் மகனாக பிறக்க வேண்டிய அவசியமென்ன? பிறப்பு என்ற பலவீனம் இறைவனுக்கு இருக்க முடியுமா? கருவறையில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதற்கு அவன் ஒரு உயிரியா? பிறப்பின் துன்பம் அவனுக்கு இருக்குமா? குழந்தை பலவீனம், பருவ பலவீனம், வாலிப பலவீனம், வயோதிக பலவீனம் இவையெல்லாம் இறைவனை ஆட்கொள்ளுமா? இந்த பலவீனங்களெல்லாம் அவனது இறைத்தன்மையை கேள்விக்குறியாக்காதா? இறப்புகளை தீர்மானித்துக் கொண்டே பிறப்புகள் நிகழ்கின்றன. மகனாக பிறந்த இறைவன் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மரித்துப் போகிறான். மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்பெற்று எழுந்தான் என்று நம்பி கொண்டாடுவோர், மகனாக பிறந்த இறைவன் மூன்று நாட்கள் இறந்துக் கிடந்தானே.. இறைவனால் இறந்துப் போக முடியுமா? இறப்பு இறைத்தன்மைக்கு உகந்ததுதானா? இந்த நம்பிக்கை இறைவனை கேவலப்-படுத்துவதாகாதா? என்று சிந்திக்க மறுக்கிறார்கள்.

சிலையாகிப் போகும் இறைவன்!
கேடு விளைவிக்கும் மனிதர்கள் சில முனிவர்களால் சபிக்கப்பட்டு கல்லாகி, சிலையாகிப் போனார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கேடு விளைவிப்போர் சிலையாகிப் போனதில் (இதுவெல்லாம் நடக்கக்கூடிய காரியமல்ல என்பது தனி விஷயம்) நியாயமிருக்கலாம். எந்த பாவமும் செய்யாத இறைவன் கல்லாகி, சிலையாகி போனது கொடுமையல்லவா? கலையுணர்வு என்ற பெயரில் கல்லை செதுக்கி கடவுளாக்கும் மனித கற்பனை, கலையால் கடவுள் கேவலப்படுவதை உணர மறுக்கிறது. இறைவனால் படைக்கப்பட்ட நாளது முதல் அகில உலகமும் தானியியங்கியாக இருக்கும்போது இவை அனைத்தையும் படைத்த இறைவனை, கடவுளை அசையா பொருளாக்கி வைத்துள்ள சகோதரர்கள் சிந்திக்க மாட்டார்களா?

மனிதனால் கற்பனை செய்யப்பட்ட இறைவனின் நிலை இப்படி இருக்கும்போது கற்பனைக்கு, பலவீனத்திற்கு அப்பாற்பட்ட உண்மையான இறைவனை எப்படி அறிவது?

இதோ அந்த உண்மையான இறைவனே அவனது வேதமான அல்-குர்ஆனில் இதற்கு வழி காட்டுகின்றான்.

(இறைத்தூதராகிய முஹம்மதே) மக்களுக்கு நீர் அறிவியும், இறைவன் என்பவன் ஒருவன்தான். (அவனுக்கு எல்லா வல்லமையும் இருக்கும்போது வேறொரு இறைவன் தேவையில்லை) (அல்-குர்ஆன்: 112-1)

அ(ந்த இறை)வன் தேவையற்றவன் (தேவை என்ற பலவீனம் அவனால் படைக்கப்பட்ட அனைத்திடமும் இருக்கலாம். அவனுக்கு எதுவும் தேவையில்லை) (அல்-குர்ஆன:; 112-2)

அ(ந்த இறை)வன் யாரையும் பெறவில்லை (சந்ததி என்ற ஒன்று அவனுக்கு அவசியமில்லை. அது பலவீனத்தின் அடையாளம்) (அல்-குர்ஆன்: 112-3)

அ(ந்த இறை)வன் யாராலும் பெறப்படவுமில்லை (யாராவது அவனை பெற்றிருந்தால், பெற்றோர் இவனையும் விஞ்சி நிற்பர் அதனால் அவனுக்கு தாய், தந்தை அவசியமில்லை.) (அல்-குர்ஆன்: 112-3)

அ(ந்த இறை)வனுக்கு நிகராக எதுவொன்றுமில்லை. (அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்ற இந்த ஒரு வார்த்தையே இறைவனுக்குரிய எல்லா இலக்கணங்களையும் உள்ளடக்கிக் கொள்கிறது)(அல்-குர்ஆன் : 112-4)

இறைவன், அவனைத்தவிர வேறு நாயனில்லை. அவன் நித்திய ஜீவன், நிலைத்திருப்பவன், சிறு உறக்கம், பெறு உறக்கம் எதுவும் அவனை பீடிக்காது. வானங்கள் பூமியில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியது. (அல்-குர்ஆன்: 2-255)

(நபியே!) உமதிறைவன் எதுவொன்றையும் மறக்கக் கூடியவனல்ல (ஒவ்வொரு படைப்பையும், படைப்பின் அசைவுகளையும், அதன் வாழ்வையும், மரணத்தையும், பிறகு எழுப்புதலையும் எல்லாவற்றையும் அவன் அறிவான். ஞாபக மறதி என்பது அவனுக்கு கிடையாது. (அல்-குர்ஆன்: 19-64)

இறைவனுக்கு எதுவொன்றையும் உதாரணமாக்காதீர்கள். நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்-குர்ஆன்: 16-74)