சுடர்

செஞ்சுடரின் சிந்தனைகள்

Thursday, March 17, 2005

இறைவனும் - அவன் தன்மைகளும்

உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதத்தினர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். தம்மை படைத்ததும், தமக்கு தேவையானவற்றை கொடுப்பதும், பாவ மீட்சிக்கான வழி காட்டுவதும் கடவுள் சக்திதான் என்று நம்புகின்றனர். ஆனால் அந்த கடவுள் அல்லது இறைவன் என்பவன் யார்? அவன் எத்தகைய ஆற்றல் படைத்தவன் என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்து அறிய மறுக்கிறார்கள். இதற்கு முரட்டு பக்தியோ அதீத பயமோதான் காரணமாக இருக்க முடியும்.

எவ்வித முன் தீர்மானமும் இன்றி திறந்த மனதுடன் இறை நம்பிக்கையின் வரலாற்றை நாம் அணுகும்போது ஒரு உண்மை பளிச்சென்று தெரிகிறது. அதாவது மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட இறைவர்கள், கடவுள்கள் ஏராளம் என்பதுதான் அந்த உண்மை. தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பும் மனிதன் அந்த சக்தியின் இலக்கணத்தை மனித இயல்பிலேயே வகுக்கத் துவங்கி விட்டான்.

சில கடவுள் நம்பிக்கைகளைப் பாருங்கள்..

மனிதனின் சிந்தனை, ஆற்றல், செயலாக்கம் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டது. இது மனிதனின் பலவீனம். இந்த பலவீனங்களே எல்லைச் சாமியையும், எல்லையம்மனையும் தீர்மானிக்கிறது. கடவுளின் சக்தி எப்படி ஓர் எல்லைக்குட்பட்டு இருக்க முடியும்? என்று மனிதன் சிந்திக்கவில்லை.

வசதிக்கேற்ப பூமியின் பல பாகங்களுக்கு இடம் பெயர்ந்த மனிதர்கள் நாளடைவில் குலங்களாக, கோத்திரங்களாக வளர்ந்து நிற்கிறார்கள். இடப்பெயர்ச்சிக்கான காரணத்தையும், வரலாற்றையும் மறந்து போன மனிதன் குலத்திற்கு ஒரு கடவுளை, இறைவனை உருவாக்கிக் கொண்டான்.

குலத்தாலும், கலாச்சாரத்தாலும் மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும் மனிதன் என்கிற இயல்பில் உலக மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது குலத்துக்கு ஒரு கடவுள், இறைவன் எப்படி இருக்க முடியும்? என்று அவன் சிந்திக்கவில்லை. தன் பலவீனத்திலேயே தன் கடவுளை மனிதன் தான் வகுக்கிறான்.

ஆக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் என்று அடுத்து இறைவனுக்குரிய இலக்கணத்தை மனிதன் வகுத்துள்ளான். எந்த ஒரு பொருளை உருவாக்கவும், அதை இயக்கவும், அதை அடியோடு அழிக்கவும் தனி ஒரு மனிதனால் முடியாது. இது அவனது பலவீனம். அவனைப் போன்று அவனோடு இன்னும் பலர் இயங்க வேண்டும். இந்த பலவீனம் அவனாக உருவாக்கிக் கொண்ட இறைவன் விஷயத்தில் பிரதிபளிக்கிறது. ஆக்கும் இறைவனால் - காக்கவும் - அழிக்கவும் முடியாதா? 'முடியும்' என்றால், 'முடியும்' என்ற தன் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்ட பலவீனம் அங்கு நிற்கிறது. 'முடியாது' என்றால், தன்னால் ஒரு காரியத்தை செய்ய முடியாதவன் எப்படி கடவுளாக - இறைவனாக இருக்க முடியும்? என்பதை மனிதன் சிந்திக்க வேண்டும். இங்கும் மனிதன்தான் இறைவனை தன் கற்பனையில் உருவாக்குகிறான் என்பதை புரிய முடிகிறது.
குடும்பஸ்தனாக இறைவன் சித்தரிக்கப்படுவதில் மனிதனின் கற்பனா சக்தி கலை கட்டுகிறது. குடும்பம் அதாவது மனைவி, குழந்தைகள் மனிதனுக்குத் தேவை. அதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அந்த சிக்கல்களையெல்லாம் மறக்கடிக்ககூடிய இன்பம் அதில் குவிந்துக்கிடப்பதால் தான் மனிதனால் குடும்ப வாழ்க்கையை தவிர்க்க முடிவதில்லை. உடல் இச்சை தீர்ந்தால்தான் இவனால் உலகில் சுருசுருப்பாக இயங்க முடியும். மனைவி தேவை என்பதும், குழந்தைகள் தேவை என்பதும் மனிதனின் அசைக்க முடியாத பலவீனங்கள். இந்த பலவீனங்களுக்குட்படுத்தியே இறைவனை இவன் உருவாக்கி விட்டான். இறைவன் அவனுக்கு மனைவி, அவர்களுக்கு மத்தியில் சல்லாபங்கள், ஊடல்கள், ஓய்வுகள், சந்ததிகள் என்று இறைவனிடம் எண்ணற்ற மனித பலவீனங்கள். 'பேசாமல் அவனும் மனிதனாக இருந்துவிட்டுப் போகலாம்' என்ற அளவிற்கு மனித பலவீனங்களால் சூழப்பட்டுள்ளான் மனிதன் உருவாக்கிய இறைவன்.

மகனாக பிறக்கும் கடவுள் !
'கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்' என்று மனித துன்பங்கள் கவிதை வடித்தது. ஆனால் உலகில் பெரும்தொகையினர் ஒரு மனிதரை கடவுளின் மகனாகவே கருதி ஆதாரமில்லாமல் நம்பி வழிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பலவீனமே கடவுள் நம்பிக்கையின் அடையாளமாகிறது. இறைவன் மகனாக பிறக்க வேண்டிய அவசியமென்ன? பிறப்பு என்ற பலவீனம் இறைவனுக்கு இருக்க முடியுமா? கருவறையில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதற்கு அவன் ஒரு உயிரியா? பிறப்பின் துன்பம் அவனுக்கு இருக்குமா? குழந்தை பலவீனம், பருவ பலவீனம், வாலிப பலவீனம், வயோதிக பலவீனம் இவையெல்லாம் இறைவனை ஆட்கொள்ளுமா? இந்த பலவீனங்களெல்லாம் அவனது இறைத்தன்மையை கேள்விக்குறியாக்காதா? இறப்புகளை தீர்மானித்துக் கொண்டே பிறப்புகள் நிகழ்கின்றன. மகனாக பிறந்த இறைவன் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மரித்துப் போகிறான். மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்பெற்று எழுந்தான் என்று நம்பி கொண்டாடுவோர், மகனாக பிறந்த இறைவன் மூன்று நாட்கள் இறந்துக் கிடந்தானே.. இறைவனால் இறந்துப் போக முடியுமா? இறப்பு இறைத்தன்மைக்கு உகந்ததுதானா? இந்த நம்பிக்கை இறைவனை கேவலப்-படுத்துவதாகாதா? என்று சிந்திக்க மறுக்கிறார்கள்.

சிலையாகிப் போகும் இறைவன்!
கேடு விளைவிக்கும் மனிதர்கள் சில முனிவர்களால் சபிக்கப்பட்டு கல்லாகி, சிலையாகிப் போனார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கேடு விளைவிப்போர் சிலையாகிப் போனதில் (இதுவெல்லாம் நடக்கக்கூடிய காரியமல்ல என்பது தனி விஷயம்) நியாயமிருக்கலாம். எந்த பாவமும் செய்யாத இறைவன் கல்லாகி, சிலையாகி போனது கொடுமையல்லவா? கலையுணர்வு என்ற பெயரில் கல்லை செதுக்கி கடவுளாக்கும் மனித கற்பனை, கலையால் கடவுள் கேவலப்படுவதை உணர மறுக்கிறது. இறைவனால் படைக்கப்பட்ட நாளது முதல் அகில உலகமும் தானியியங்கியாக இருக்கும்போது இவை அனைத்தையும் படைத்த இறைவனை, கடவுளை அசையா பொருளாக்கி வைத்துள்ள சகோதரர்கள் சிந்திக்க மாட்டார்களா?

மனிதனால் கற்பனை செய்யப்பட்ட இறைவனின் நிலை இப்படி இருக்கும்போது கற்பனைக்கு, பலவீனத்திற்கு அப்பாற்பட்ட உண்மையான இறைவனை எப்படி அறிவது?

இதோ அந்த உண்மையான இறைவனே அவனது வேதமான அல்-குர்ஆனில் இதற்கு வழி காட்டுகின்றான்.

(இறைத்தூதராகிய முஹம்மதே) மக்களுக்கு நீர் அறிவியும், இறைவன் என்பவன் ஒருவன்தான். (அவனுக்கு எல்லா வல்லமையும் இருக்கும்போது வேறொரு இறைவன் தேவையில்லை) (அல்-குர்ஆன்: 112-1)

அ(ந்த இறை)வன் தேவையற்றவன் (தேவை என்ற பலவீனம் அவனால் படைக்கப்பட்ட அனைத்திடமும் இருக்கலாம். அவனுக்கு எதுவும் தேவையில்லை) (அல்-குர்ஆன:; 112-2)

அ(ந்த இறை)வன் யாரையும் பெறவில்லை (சந்ததி என்ற ஒன்று அவனுக்கு அவசியமில்லை. அது பலவீனத்தின் அடையாளம்) (அல்-குர்ஆன்: 112-3)

அ(ந்த இறை)வன் யாராலும் பெறப்படவுமில்லை (யாராவது அவனை பெற்றிருந்தால், பெற்றோர் இவனையும் விஞ்சி நிற்பர் அதனால் அவனுக்கு தாய், தந்தை அவசியமில்லை.) (அல்-குர்ஆன்: 112-3)

அ(ந்த இறை)வனுக்கு நிகராக எதுவொன்றுமில்லை. (அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்ற இந்த ஒரு வார்த்தையே இறைவனுக்குரிய எல்லா இலக்கணங்களையும் உள்ளடக்கிக் கொள்கிறது)(அல்-குர்ஆன் : 112-4)

இறைவன், அவனைத்தவிர வேறு நாயனில்லை. அவன் நித்திய ஜீவன், நிலைத்திருப்பவன், சிறு உறக்கம், பெறு உறக்கம் எதுவும் அவனை பீடிக்காது. வானங்கள் பூமியில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியது. (அல்-குர்ஆன்: 2-255)

(நபியே!) உமதிறைவன் எதுவொன்றையும் மறக்கக் கூடியவனல்ல (ஒவ்வொரு படைப்பையும், படைப்பின் அசைவுகளையும், அதன் வாழ்வையும், மரணத்தையும், பிறகு எழுப்புதலையும் எல்லாவற்றையும் அவன் அறிவான். ஞாபக மறதி என்பது அவனுக்கு கிடையாது. (அல்-குர்ஆன்: 19-64)

இறைவனுக்கு எதுவொன்றையும் உதாரணமாக்காதீர்கள். நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்-குர்ஆன்: 16-74)

4 Comments:

 • At 11:10 AM, Blogger Akbar Batcha said…

  Its simple and good explanation. Go ahead and write your veiws and explanations.

   
 • At 3:16 PM, Blogger சுட்டுவிரல் said…

  ஒரு நல்ல கட்டுரை.
  தமிழ் வரலாற்றில் பார்க்கும்பொழுது பல்வேறு 'கடவுள்'கள் உண்டானதற்கு/உருவாக்கப்பட்டதற்கு மனிதனின் மிகைப்படுத்தும் தன்மையும் தன்முனைப்பு என்கிற ஈகோ வுமே பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம். தமிழர்கள் நல்லவர்களை த்தான் தெய்வங்களாக கருதினர் என்பதற்க்கு இலக்கிய ஆதாரமுண்டு.

  அதாவது, நல்லவர்களை தேவர்களாக(வானவர்களாக) முதலில் கருதுவது, பிறகு அவர்களுக்கு தெய்வ அந்தஸ்து அளிப்பது. ...... என்று போய் கடைசியில் கடவுளுக்குரிய உரிமையை பிறருக்கு அளித்து விடுகின்றனர். (அச்சமயத்தில்.... ஏதேனும் காக்கை உட்காரப்போய் பனம்பழம் விழுந்து விடுமானால்....... அது போதும் - இலக்கியங்களும் புராணங்களும் வடித்து ஜென்மத்துக்கும் கொண்டாடிவிடுகிறார்கள்). பிறகென்ன, கும்பிடப்போன 'தெய்வம்' குறுக்கே வருவது ப்போய் குறுக்கே வருபவர்களையெல்லாம் கும்பிட ஆரம்பித்து விடுகிறார்கள் 'சத்தியம்' அறியாமலேயே.

   
 • At 8:07 AM, Blogger Sardhar said…

  ///கடவுளின் சக்தி எப்படி ஓர் எல்லைக்குட்பட்டு இருக்க முடியும்? என்று மனிதன் சிந்திக்கவில்லை.///

  கடவுளின் உருவத்தை மனதில் ஒருமுகப்படுத்தாமல் எப்படி கடவுளை நினைக்க முடியும் என்பதிலிருந்து ஆரம்பித்த எனது மிக நெருங்கிய மாற்றுமத நண்பரின் விவாதம் இப்போது, இறைவன் என்ற சக்தி மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது, அதனை மனிதர்களாகிய நாம் உருவகிக்க முடியாது எனும் நிலைக்கு வந்துள்ளது. குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, தொலை நோக்குப்பார்வையுடன் இதை சிந்தித்தால், மிக இலகுவாக எவரும் அறிந்து கொள்ள முடியும்.

  -- சர்தார்

   
 • At 9:47 PM, Blogger சுடர் said…

  சர்தார், 'மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை வணங்க ஒரு வடிவம் வேண்டும்' என்ற சிந்தனை தவறானது என்பதை உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் வணக்கத்தின் வழியாக பிறருக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார்கள், என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள்.

  மனதை ஒருமைப்படுத்த இறைவனின் உருவம் தேவையில்லை. அவனது வல்லமைகளை நினைப்பதே போதுமாகும்.

  இறைவனை விளங்க 'பூமியிலும் - உங்களுக்குள்ளும் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன' என்று குர்அனின் ஒரு வசனம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

   

Post a Comment

<< Home