சுடர்

செஞ்சுடரின் சிந்தனைகள்

Monday, April 11, 2005

அறிவு இயலாமை வன்முறை (2)

கொஞ்சம் அறிவு - கொஞ்சம் இயலாமை - கொஞ்சம் வன்முறை

அரசியல் இஸ்லாம் என்ற தலைப்பில் நேசக்குமாரர் எழுதியுள்ள கருத்துக்களின் நிலைப்பாட்டை பார்த்து வருகிறோம். அவரது கடந்தக்கால கட்டுரைகளில் இருந்த சற்றேனும் நியாய உணர்வுக் கூட இந்தக் கட்டுரையில் இல்லை. இந்தக் கட்டுரையை 'இயலாமை' அல்லது 'வன்முறை' என்ற ஏதோ ஒரு மனத் தூண்டலே அவரை எழுத வைத்துள்ளது.

அரசியல் இஸ்லாம் குறித்து அவர் வைத்துள்ள வாதங்களை பார்ப்போம்.

2. அல்லாஹ்வால் அனுப்பப் பட்ட (இறுதி) இறைத்தூதர் முகமது அவர்கள்.

மேலே கண்ட அல்லாஹ்வையும் விட அதிக மரியாதைக்குரியவராக முகமது நபி அவர்கள் கருதப் படுகிறார்கள். அல்லாஹ்வை அவன் இவன் என்பதைக் காணலாம். ஆனால், முகமது நபியவர்களைப் பற்றி எந்தவொரு கட்டத்திலும் சிறிது கூட மரியாதைக் குறைவான வார்த்தைகள் குறைகூறல்கள் எழும்பா. பாகிஸ்தானில் அல்லாஹ்வைத் திட்டினால் ஆயுள் தண்டனை, நபிகள் நாயகத்தைத் திட்டினால் மரண தண்டனை என்பதெல்லாம் இந்த அரசியல் இஸ்லாத்தின் நீட்சிதான்(இது குறித்து மரத்தடியில் முன்பு விரிவாக எழுதியுள்ளேன். பழைய பதிவுக்கு சென்றால் இவற்றைக் காணலாம்). அல்லாஹ்வையும் விட அதிக சக்திவாய்ந்தவராக, கடவுளும், வானவர்களும் கூட வணங்குபவராக நபிகள் நாயகம் சித்தரிக்கப் படுகிறார்.


இயலாமை.

உலக அளவில் மக்கள் மனங்களை வென்றெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கொள்கையை விமர்சிக்கும் போது அந்தக் கொள்கையின் அடிப்படைகளை விளங்கி அதில் தவறிருந்தால் விமர்சிக்கலாம். அதற்கு இயலாவிட்டால் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட உலக மக்களையாவது ஒரு பார்வை பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாத விமர்சனம் எந்த விதத்திலும் வலுப் பெறாது. நேசக்குமாரன் வலுப்பெறாத விமர்சனத்தையே வைத்துள்ளார்.

அல்லாஹ்வை 'அவன்' 'இவன்' என்று கூறுகிறோமாம். முஹம்மத் அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது இப்படி குறிப்பிடாமல் மிக மரியாதையுடன் குறிப்பிடுகிறோமாம். இது இஸ்லாத்தின் அரசியல் பலத்தைக் காட்டுகிறதாம். அல்லாஹ்வை விட சக்தி வாய்ந்தவராகவும் கடவுளும் - வானவர்களும் கூட வணங்கக் கூடியவராக முஹம்மத் அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்களாம். அனைத்தையும் கற்றுணர்ந்தவர் போல அவ்வப்போது இணையத்தள முகவரிகளையும் - பல புத்தகங்களையும் மேற்கோள் காட்டும் நேசக்குமாரர் குறைந்தப் பட்சம் அரபுமொழியின் சில வார்த்தைகளையாவது கற்றிருந்தால் - பிறரிடம் கேட்டு தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் உளறி கொட்டாமல் இருந்திருப்பார்.

அரபு மொழியில் தமிழ் மொழியில் உள்ள மரியாதை வார்த்தைகள் போன்று கிடைப்பது மிக மிக அறிது. தமிழில் 'அவன்' 'அவர்' என்று நாம் இரண்டாக பிரிக்கும் இரு வார்த்தைகளுக்கு அரபு மொழியில் இரு வார்த்தைகள் கிடைக்காது. அவன் என்றாலும் அவர் என்றாலும் அதை குறிக்க அரபு மொழியில் 'ஹுவ' என்ற ஒரே வார்த்தைதான் உள்ளது. இறைவனை 'அவன்' என்று நாம் குறிப்பிடுகிறோம் இதற்கும் அரபுவில் 'ஹுவ' என்ற வார்த்தைதான் கிடைக்கும். முஹம்மதை 'அவர்' அல்லது 'அவர்கள்' என்று குறிப்பிடுகிறோம் இதற்கும் அரபுவில் 'ஹுவ' என்ற அதே வார்த்தைதான்.

அரபு மொழியில் தந்தை மகனை பற்றி குறிப்பிடும் போதும், மகனோ, மகளோ தன் தந்தையைப் பற்றி குறிப்பிடும் போதும் 'ஹுவ' (இதன் நேரடிப் பொருள் அவன் - அவர்) என்றே குறிப்பிடுவார்கள். அவ்வளவு ஏன் தமிழ் வழக்கில் மனைவி தன் கணவனை சுட்டிக் காட்டும் போது பரவலாக 'அவங்க' என்ற மரியாதைக் குறியீடை பயன்படுத்துகிறார்கள். அரபு மொழிக்கு அவங்க என்பதெல்லாம் தெரியாது. அங்கு ஒரு பெண் தன் கணவனை சுட்டிக் காட்டும் போதும் 'ஹுவ' என்ற வார்த்தையையே பயன்படுத்துவாள்.

இதை புரிந்துக் கொள்வதற்காக இரண்டு வசனங்களைப் பார்ப்போம்.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (அல் குர்ஆன் 112:1)

உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல் குர்ஆன் 53:3-5)

இந்த இரண்டு வசனங்களில் முதல் வசனம் இறைவனைப் பற்றியும் இரண்டாவது வசனம் முஹம்மதைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அந்த வசனங்களில் அவன் - அவர் என்று மொழியாக்கப்பட்டுள்ள இடங்களில் 'ஹுவ' என்ற பதமே வந்துள்ளது. அவன் - அவர் என்ற இடங்களை மாற்றி மொழிபெயர்க்க அரபிமொழி வழக்கில் தடையொன்றும் இல்லை.

(நபியே) நீர் கூறும் அல்லாஹ் அவர் ஒருவரே! என்று முதல் வசனத்தையும்,

உங்கள் தோழன் வழிகெட்டுவிடவுமில்லை. தவறான வழியில் செல்லவுமில்லை. அவன் தன் இச்சைப்படி எதையும் பேசுவதில்லை. அது அவனுக்கு வஹிமூலம் (நேசக்குமாரன் சொல்வது போல இறை ஆவேசம் மூலம்) அறிவிக்கப்படுவதேயன்றி வேறில்லை என்று இரண்டாவது வசனத்தையும் மொழியாக்கினால் தடையொன்றும் இல்லை.

ஆனால் யாரும் அப்படி மொழியாக்குவதில்லை. இறைவன் நாட்டம் இருந்து நாளைக்கு நேசக்குமாரரே இஸ்லாத்தை எற்று குர்ஆனை மொழியாக்கம் செய்யும் சூழ்நிலை வந்தாலும் அவர் கூட அவன் - அவர் ஆகியவற்றை இடமாற்றி போட்டு மொழி பெயர்க்க மாட்டார். மொழிப் பெயர்க்கக் கூடாது என்பதல்ல. அவ்வாறு மொழி பெயர்ப்பது நாகரீகமல்ல என்று உணர்வார்.

இறைவனை 'அவன்' என்று குறிப்பிடுவது எதனால்?

இறைக் கொள்கை விஷயத்தில் முஸ்லிம்களாகிய நாம் தெளிவான கண்ணோட்டத்தில் இருக்கிறோம். மரியாதை என்றப் பெயரில் இறைத் தன்மையின் இடற்பாடு ஏற்படுவதை நாங்கள் ஒரு போதும் செய்ய மாட்டோம்.

மரியாதைக்கும் தனித்தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டால் தெளிவுப் பெற விரும்புவோர் தெளிவு பெற்று விடுவார்.

நேசக்குமாரரையே உதாரணமாக்குவோம்.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு 'கிறுக்கன்' நேசக்குமார் அவர்களே... என்று யாராவது குறிப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மதிப்பு - மரியாதை - அவர்கள் என்ற மதிப்பான அனைத்து வார்த்தைகளும் தனக்கு கிடைத்து விட்டது என்று அவர் மனம் மகிழ்வாரா...?

அதே சமயம் இன்ன பிறர் இப்படி குறிப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

நேசக்குமாரன் நல்ல சிந்தனையாளன் எதையும் தனித்தன்மையுடன் அணுகக் கூடியவன் என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் இதில் அவன் - அவன் என்ற வார்த்தை வருகிறது அதனால் அவர்கள் என்னை கேவலப்படுத்தி விட்டார்கள் என்று முடிவெடுத்து முகம் சுளிப்பாரா...?

தனித்தன்மை கெட்டுப்போகும் விதத்தில் வெளிப்படும் மரியாதை வார்த்தைகள் உண்மையில் மரியாதை வார்த்தைகளாக இருக்கவே முடியாது. அது தனித்தன்மைகளை கொச்சைப்படுத்தும் கேவலமான வார்த்தைகளாகவே காட்சியளிக்கும்.

தனித்தன்மையில் தனக்கு நிகரில்லாமல் இருக்கக் கூடியவன் இறைவன். அவனது தனித்தன்மையின் சாயலில் கூட பிறருக்கு பங்கில்லை என்பதை தெளிவாக குர்ஆனில் உணர்த்துபவன் இறைவன். அவனது தனித்தன்மைகளை குறிப்பிட 'அவன்' என்ற வார்த்தையே பொருத்தமானதாகும். முஸ்லிம்கள் இறைவனை தமிழில் 'அவர்' என்று குறிப்பிடுவார்களானால் கிறிஸ்த்துவர்கள் இயேசுவைக் குறிப்பிடும் 'அவர்' என்ற சாயல் இங்கு படியும். அவரைத் தான் முஸ்லிம்களும் குறிப்பிடுகிறார்களோ என்ற பார்வைக் கூட உருவாகலாம். இது அவனது தனித்தன்மைக்கு இடற்பாடுகளை ஏற்படுத்த வல்லது என்பதால் தான் முஸ்லிம்கள் இறைவனை அவர் என்று குறிப்பிடுவதில்லை.

அவன் என்பது கேவலமான வார்த்தை இல்லையென்றால் அதே வார்த்தையால் முஹம்மதையும் குறிப்பிடலாமே.. என்று நேசக்குமாரன் குறுக்கு விசாரணை செய்யலாம். "வள்ளுவனையும் - கம்பனையும் ்அவன்' என்று குறிப்பிடுவது போன்று உன்னையும் நான் 'அவன்' என்று தான் குறிப்பிடுவேன்" என்று நேசக்குமாரனுடைய குழந்தை (திருமணம் முடிந்து குழந்தை இருந்தால்) குறிப்பிட்டால் அதை அவர் ஆமோதிக்க மாட்டார். வள்ளுவனையும் - கம்பனையும் 'அவன்' என்று குறிப்பிட்டு பாடம் நடத்தும் ஆசிரியரை மாணவர்கள் அதே அடைமொழியுடன் அழைத்தால் அதை ஒருவர் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதற்கு மொழி வழக்கில் மக்களிடம் வேறூன்றிப் போன மரியாதைக் குறியீடுகளே காரணமாகும். மரியாதைக் குறியீடுகள் அழிந்துப் போய் அவன் என்ற வார்த்தையே புழக்கத்திற்கு வந்து விட்டால் அப்போது யாரும் யாரையும் வித்தியாசமாக எண்ண மாட்டார்கள்.

"அல்லாஹ்வை விட சக்தி வாய்ந்தவராக, கடவுளும் வானவர்களும் கூட வணங்குபவராக நபிகள் நாயகம் சித்தரிக்கப்படுகிறார்" என்று கூறுகிறார் நேசக்குமார். நண்பரே ஏன் இப்படி பொய்யான சிந்தனையை உரமிட்டு உமிழ்கிறீர்கள்.

அந்த இறைத்தூதரை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற உணர்ச்சிவசப்பாடே உங்களிடம் அதிகமாகத் தெரிகிறது (குறிப்பாக இந்தக் கட்டுரையில்)

'தான் இறைவனின் அடிமைதான்' என்பதை செயல்பாடுகளின் வழியாகவும் வார்த்தைகளாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்த்தி வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் முஹம்மத் அவர்கள். தன்னை ஏற்றுக் கொண்டவர்களில் யாரொருவரும் தனி மனித வழிபாட்டிற்கு இரையாகி விடக் கூடாது. தன்னை உட்பட எந்த மனிதனுக்கும் வழிபாடு நடத்தி விடக் கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாகவும் கண்ணும் கருத்துமாகவும் இருந்தவர் அந்த மாமனிதர்.

தான் இன்று செய்துக் கொண்டிருக்கும் அதே பணியை தனக்கு முன் இஸ்ரவேல் சமூகத்தாரிடம் செய்வதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் இயேசு அவர்கள் மதகுருக்களாலும் - மக்களாலும் வணங்கக் கூடிய கடவுளாக ஆக்கப்பட்டு விட்டதை பார்க்கிறார்கள். இயேசு கடவுளோ கடவுளின் குமாரரோ அல்ல என்று தொடர்ந்து எச்சரித்து வந்த அதே வேலையில் 'மரியாளுடைய மகன் இயேசுவை விட என்னை சிறந்தவன் - உயர்ந்தவன் என்று சொல்லி விடாதீர்கள்" என்ற கண்டிப்பையும் தான் இறக்கும் வரை தொடர்ச்சியாக முன் வைக்கிறார்கள்.

அருகிலிருக்கும் நாடுகளுக்கு வியாபார நிமித்தமாக சென்ற முஆத் என்ற நபித்தோழர் அந்த நாட்டு மக்கள் தனது மன்னருக்கு சிர வணக்கம் செய்வதை பார்க்கிறார். 'இந்த சிற்றரசனை விட நாம் ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் பல மடங்கு உயர்ந்தவர்கள் அவர்களுக்கு நாம் ஏன் இவ்வாறு மரியாதை செய்யக் கூடாது என்று தனக்குள் முடிவு செய்துக் கொண்டு போன காரியம் முடிந்ததும் ஊர் (மதீனா) திரும்புகிறார்கள். இறைத்தூதரை சந்தித்து தான் கண்ட காட்சியையும் அதிலிருந்து தனக்கு உதித்த எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இதை கேட்டதும் இறைத்தூதரின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரிகிறது. "முஆதே! நான் இறந்து விட்டால் எனது மண்ணறையில் (கப்ரில்) வந்து வணங்குவீரா.. என்று கேட்கிறார்கள். 'வணங்கமாட்டேன்' என்று முஆத் பதிலளிக்கிறார். ஆம்! அதே போன்று தான் உயிரோடு இருக்கும் போதும் எனக்கு சிர வணக்கம் செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்தலாம் என்றிருந்தால் கணவனுக்கு மனைவியை சிரம்பணிய சொல்லி இருப்பேன் ஆனால் அதற்கு கூட அனுமதியில்லை" என்று கூறினார்கள்.

மனித இயல்புடன் அவர்களிடம் சில நேரங்கள் வெளிப்பட்ட சிறு சிறு தவறுகளைக் கூட இறைவன் சுட்டிக் காட்டி கடினமாக எச்சரித்துள்ளான். குர்ஆனை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு இத்தகைய சம்பவங்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும்.

தான் இறைவனின் அடிமை என்பதை மக்களுக்கு உணர்த்தி அதில் இறுதி வரை வெற்றிக் கண்டவர் உலகில் முஹம்மத் அவர்கள் ஒருவராக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அடிமைத் தனத்தை நிலைப்பெற வைத்ததால் தான் அவருக்கு கப்ர் வழிபாடோ, சிலையோ, படமோ, வடிவமோ இன்றுவரை உலகில் இல்லாமல் இருக்கிறது. அத்தகைய ஒரு இறைத்தூதரைப் போய் 'அல்லாஹ்வும் வானவர்களும் கூட வணங்குபவராக அவர் சித்தரிக்கப்படுகிறார்' என்று எழுதுவதற்கு நீங்கள் (நேசக்குமாரர்) வெட்கப்பட்டிருக்க வேண்டும்.


இனி தொடர்ந்து 'நேசக்குமாரர் அரசியல் இஸ்லாமா'க எடுத்து வைத்துள்ள இன்னும் சில கருத்தோட்டங்களைப் பார்ப்போம்.

16 Comments:

Post a Comment

<< Home